Monday, 6 April 2015

Lean on Me (1989)


அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம். பேட்டர்சன் எனும் ஊரில்,
ஈஸ்ட்சைடு பள்ளி.


ஓர் வகுப்பறையில் ஆணும் பெண்ணும்- இரு மாணவர்கள் ஓடுவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர் கேள்வியைக்கேட்டதும் இருவரும் ஓட, பெண் முந்திச்சென்று  மேசைமீது இருந்த மணியை அடிக்கிறாள். பெண்கள் அணி பதில்சொல்லும் வாய்ப்பைப்பெறுகிறது. இப்படியே விளையாட்டாகவே பாடம் சார்ந்த வினாக்கள், வினாடிவினா நிகழ்வாக நடைபெறுகிறது. மாணவ,மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கு ஆர்வமூட்டியபடியே சுறுசுறுப்பாக விளையாட்டை தொடர்கிறார் ஆசிரியர். ஒரு நண்பர் வந்து அவரை அவசரமாக அழைக்கிறார்.

பள்ளி நிவாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது!

அதெப்படி? என்னை அழைக்காமல்?

கோபமுடன் கூட்டம் நடைபெறும் அறைக்குள் நுழைகிறார்.

என்னை ஏன்  அழைக்கவில்லை?

உங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.

நான் மாணவர்களின் நலனுக்காகவே பாடத்திட்டத்தை எதிர்த்து போராடுகிறேன்.

உங்களை வேறுபள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள். அதன் மூலம் இந்தப்பள்ளி சில நன்மைகளைப்பெறும்.

அனைவரையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியேறுகிறார்.

அவரே  ஜோ கிளார்க்.


இருபது ஆண்டுகள் கழித்து,


 ஈஸ்ட்சைடு பள்ளி. குப்பையும் கூளமுமாக இருக்கிறது. சுவர்கள் முழுதும் கிறுக்கல்கள். எங்கும் கூச்சல். புகை,போதைப்பழக்கத்தில் மாணவர்கள்.

ஆங்காங்கே அடிதடி. பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள் படிக்கின்றனர். வசதியில்லாத  வெள்ளையர்கள் சிலர். வெள்ளைப்பெண்கள் கறுப்பின பெண்களால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியைக்கும் அதே நிலை. மாணவர்களின் சண்டையை விலக்கச் செல்லும் ஆசிரியர் கடுமையாக தாக்கப்படுகிறார்.போதைப்பொருள் தாராளமாக விற்பனையாகிறது.

பள்ளியின் நிலை குறித்து நகர மேயர் கல்வி அதிகாரிகளுடன் விவாதிக்கிறார். நம் பள்ளி இந்த மாநிலத்திலேயே தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தா ஆண்டும் இதே நிலை தொடர்ந்தாள் பள்ளியை அரசு எடுத்துக்கொள்ளும். தேர்தல் வரப்போகும் நேரத்தில் இது எனது வெற்றியைப்பாதிக்கும் என்கிறார் மேயர்.

அடிப்படைதிறனறித்தேர்வில் குறைந்தபட்சம்   75% சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பள்ளியை அரசு எடுத்துக்கொள்ளாது. என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளியின் தற்போதைய தேர்ச்சி வீதம் 38% என்பதை அறிந்த மேயர் கவலைப்படுகிறார்.


இதை மாற்ற முடியுமா?

ஒருவரால் முடியும்.

யார்?

அதிகாரி சிரிக்க, மேயரோ,

நீங்கள் சொல்வது அவனையா?

ஆம்.

அவன் கோபக்காரனாயிற்றே?

அவரால் மட்டுமே பள்ளியை மீட்டெடுக்க முடியும்.

மேயர் சம்மதிக்கிறார்.

கல்வி அதிகாரிகள் ஜோ கிளார்க்கை காண, அவர் தற்போது பணிபுரிந்துவரும் தொடக்கப்பள்ளிக்கு செல்கின்றனர்.

தன முன்னாள் நண்பரான பள்ளி மேற்பார்வையாளரை கண்டு மகிழ்கிறார் ஜோ. அவர்கள் தேடிவந்த காரணத்தை அறிந்து கோபம் கொள்கிறார். அந்தப்பள்ளி என்னை விரட்டிய பள்ளி அங்கே ஏன் நான்செல்லவேண்டும்? என்று கேட்க, நண்பர் அவருடன் வாதிட்டு மனதை மாற்றுகிறார்.

ஜோ, ஈஸ்ட்சைடு பள்ளிக்குள் நுழைகிறார்.


பள்ளி - கூச்சலும் குழப்பமும் வன்முறையுமாக காட்சியளிக்கிறது.

ஆசிரியர்கள் கூட்டம். உதவித்தலைமையாசிரியர் வரவேற்று பிற ஆசிரியர்களை அறிமுகப்படுத்தியபடியே பள்ளி குறித்த செய்திகளை சொல்லத்தொடங்க, ஜோ இடைமறித்து,

அமருங்கள். நீங்கள் பள்ளியை நடத்துகிறீர்களா?

எனதுகூட்டத்தில் இனி யாரும் பேசக்கூடாது.

உங்கள் பென்சிலை எடுத்து எழுதத்தொடங்குங்கள்,

ஒழுங்கீனமானவர்கள், போதைப்பொருள் விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் பெயர்களை எழுதுங்கள். மதியத்திற்குள் என் மேசை மீது இந்தப்பட்டியல் இருக்கவேண்டும்.

துப்புரவுப்பணியாளர்கள் சுவர்களை சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்களின் உணவுக்கூடத்தில் இருக்கும் வலைத்தடுப்புகளை அகற்றுங்கள். மிருகக்  கூண்டுகள்  போலவே தெரிகின்றன.

நீங்கள் அவர்களை மிருகம் போல நடத்துவதாலேயே அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.

பள்ளிக்கு புதிய காவலர்கள். ஆசிரியர்களின் பொறுப்புகளில் மாற்றம்.

என கடுமையான மாற்றங்களை அறிமுகம் செய்கிறார்.

ஆசிரியரின்பணி கற்பித்தல். இத்தனை காலம் என்ன செய்தீர்கள்?

இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும். நான் சொல்வதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ஆசிரியர் கூட்டம் முடிகிறது.



பள்ளியின் கலையரங்கம். எங்கும்  கூச்சல். ஆசிரியர்கள் தங்கள் கையிலிருக்கும் பட்டியலில் உள்ள மாணவர்களை மேடைக்குச்செல்லுமாறு கூற, அவர்களும் ஆரவாரத்துடன் மேடைக்குச்செல்கின்றனர்.

மேடையில் சிலர் பாட, சிலர் புகை பிடிக்க, கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கிறது.

சிறிது நேரத்தில் ஜோ மேடை நோக்கி வருகிறார். மாணவர்களிடம் இருந்து மைக்கை வாங்கி அரங்கை அமைதிப்படுத்துகிறார்.

 பள்ளிக்குள்  புகைத்தல் தடை செய்யப்படுகிறது. நிறுத்துங்கள்.

அமைதி.அமைதி.

என் பெயர் ஜோ கிளார்க். உங்களின் புதிய தலைமையாசிரியர்.

மேடையில் மாணவர்கள் கூச்சலிடுகின்றனர்.

இப்போது மேடையிலிருக்கும் மாணவர்கள், பள்ளிப்பாடலை பாடுவார்கள்!

மேடையில் மீண்டும் கூச்சல்.

ஜோ, அரங்கில் அமர்ந்திருக்கும் மாணவர்களைப்பார்த்து,

இங்கே மேடையில் இருப்பவர்கள் கடந்த ஆண்டுகளில் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

போதைப்பொருள்களை விற்கின்றனர். பயன்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவரிடையே ஒழுங்கீனமாக நடக்கின்றனர். எனவே, இவர்கள் அனைவரையும் பள்ளியை விட்டு நீக்குகிறேன்.

மேடையில் இருந்தவர்கள் கோபமாக கூச்சலிட்டு மறுக்க, காவலர்களை அழைத்து மேடையிலிருந்த மாணவ,மாணவியரை வெளியேற்றுகிறார் ஜோ.


அரங்கம் அமைதியாக இருக்கிறது. அவர்களைப்பார்த்து,

மாணவர்களே,உங்களின் வேலை படிப்பது. தவறு செய்தால் அடுத்தது நீங்களாகவும் இருக்கலாம்.

இந்தப்பள்ளி இறந்துவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். இறந்ததிலிருந்து வெளிவரும் ஆவிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.

நீங்கள் எனது ஆவிகள். உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில்.

கல்வி கற்கவே இங்கு வந்திருக்கிறீர்கள்.

புதிய ஈஸ்ட்சைடு பள்ளிக்கு உங்களை வரவேற்கிறேன்.


பள்ளியில் பெற்றோர் கூட்டம்.


பெற்றோரிடையே கடும் விவாதம்.

ஒரு பெண் ஆவேசமாக, ஜோ மீது குற்றங்களை அடுக்குகிறார்.

என் பையன் குற்றமற்றவன். வீண்பழி சுமத்தி இவர் பலரை வெளியேற்றிவிட்டார்.

இவரால் பள்ளிக்கே அவமானம்.

சிலர் ஒத்துப்பேச,சிலர் எதிர்க்க கூச்சல் அதிகரிக்கிறது.

அனைவரையும் அமைதிப்படுத்தும் வகையில் ஜோ எழுந்து பேசத்தொடங்குகிறார்.

ஒரு அழுகிய ஆப்பிள்,கூடையில் இருக்கும் எல்லாவற்றையும் அழுகச்செய்துவிடும்.

பள்ளியில் பயிலும் 27௦௦ மாணவர்களின் நலனுக்காகவே கேவலமாக நடப்பவர்களை வெளியேற்றினேன்.

ஜோ தொடர்ந்து பேச, பெரும்பாலான பெற்றோர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.


மறுநாள் ஜோ பள்ளிக்கு வரும்போது ஒரு மாணவன் வாசலில் அமர்ந்திருக்கிறான்.

சார், நான் தவறுதலாக வெளியேற்றப்பட்டிருக்கிறேன்.

உன் பெயர்?

மாணவன் பெயரை தனது கையிலிருந்த பைலில் தேடிப்பார்க்கிறார்.

அவன் மீதுள்ள குற்றங்களை வாசிக்கிறார்.

மாணவன் மறுக்கிறான்.

கோபமாக அவனை பள்ளியின் மாடிக்கு அழைத்துச்செல்கிறார்.

இளங்காளைபருவம். தவறுகள் செய்யத்தூண்டும். நீதான் குடும்ப நிலை அறிந்து கவனமாக இருக்க வேண்டும். பள்ளியை விட்டு நீக்கப்பட்டது உன் அப்பாவுக்கு தெரியுமா?

தெரியாது.

ஏன்?

அவர் எங்களுடன் இல்லை.பிரிந்து சென்றுவிட்டார்.

எனது குற்றங்களை ஒத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

இனிமேல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.

வருந்தி அழுகிறான்.

மாடியிலிருந்து கீழே குதி. என்கிறார் ஜோ.

அவன் மறுத்து அழுகிறான்.

உன்னை அழித்துக்கொள்ள விரும்பினால் கீழே குதி. போதைப்பொருள் பயன் படுத்தினால் உன் மூளை செல்கள் அழியும். உடல் மரணத்தின் பாதையில் செல்லும்.

இனிமேல் படிப்பது மட்டுமே உன் வேலை. மீண்டும் தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவாய்.

மாணவன் மகிழ்கிறான், இனி நன்கு படிப்பதாக உறுதியளிக்கிறான்.


பள்ளியெங்கும் கையில் ஒலிபெருக்கியுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறார் ஜோ. உணவகத்தில் மாணவரிடையே நலம் விசாரித்தபடி செல்லும் ஜோ, சில மாணவர்கள் சேட்டை செய்வதை பார்க்கிறார்.

அவர்களிடம், பள்ளிப்பாடலை பாடுமாறு சொல்கிறார். பள்ளிப்பாடல் பாடும்போது யாரும் அசையக்கூடாது என்றும் கட்டளையிடுகிறார். கீழே கிடந்த காகிதக்குப்பையை எடுக்க முயன்ற கால்பந்து பயிற்சியாளரை கண்டித்து முதல்வர் அறைக்கு செல்லுமாறு கூறுகிறார். மாணவர்களுக்குப்பாடல் தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு அவர்களை வகுப்பறையிலிருந்து நீக்கி, மூன்று நாட்களுக்குப்பின் பள்ளிப்பாடலை முழுமையாக பாடிக்காட்டவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

அங்கிருந்து, இசை அறைக்குச்செல்கிறார் ஜோ.

மாணவர்கள் பாடல் பயிற்சியில் இருக்கிறார்கள்.

இசை ஆசிரியையிடம்,

பிற பாடல்களை பயிற்றுவிப்பதை நிறுத்துங்கள். அனைவருக்கும் பள்ளிப்பாடலை முதலில் கற்பித்து பாடப்பயிற்சி கொடுங்கள்.

இப்போதைக்கு முடியாது. நியூயார்க் நகரில் நடக்கவுள்ள ஒரு விழாவிற்காக மாணவர்கள் மொசார்ட்டின் இசையை பயிற்சி செய்துகொண்டுள்ளனர்.

அது பள்ளிக்கு முக்கியமில்லை.

அதுதான் முக்கியம்.ஓவ்வொரு ஆண்டும் நம் பள்ளி அந்த விழாவில் பங்குபெறுகிறது.

அப்படியா? இந்த ஆண்டு நம் பள்ளி அவ்விழாவில் பங்குபெறாது.

ஏன்?

நான் அனுமதிக்கமாட்டேன்.

இசை ஆசிரியை தொடர்ந்து மறுத்துப்பேச,

உங்களை பள்ளியில் இருந்து நீக்குகிறேன்.என்கிறார் ஜோ.

வழக்கறிஞருடன்  சந்திப்பதாக கத்திவிட்டு ஆசிரியை கோபமுடன் வெளியேறுகிறார்.


கோபமுடன் அறைக்கு வந்த ஜோ, கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் ஆங்கில ஆசிரியரை கண்டிக்கிறார்.

பள்ளிப்பாடல் பாடும்போது எக்காரணம் கொண்டும் அசைவது தவறு என்கிறார் ஜோ.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது.

அவரையும் பள்ளியை விட்டு நீக்குவதாக ஜோ, சொல்ல அவரும் கோபத்துடன் வெளியேறுகிறார்.

ஜோவின் உதவியாளர்,

முதல்வரால் ஆசிரியர்களை நீக்க முடியாது. என்று எடுத்துரைக்க,

நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன் என்கிறார் ஜோ.

ஓராண்டுக்குள் பள்ளியை மாற்றவேண்டும் என்பதால் ஆசிரியர்களிடம் கடுமையாகவே நடந்துகொள்ளும் ஜோ, மாணவர்களிடையே அன்பாகவும் பாசமாகவும் பழகுகிறார்.


உணவகத்தில் மாணவரிடையே மோதல் என்று செய்தி வருகிறது.

அவசரமாக ஓடுகிறார் ஜோ.

பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட, போதைப்பொருள் விற்பனைசெய்யும் மாணவன் ஒருவன் படித்துக்கொண்டிருக்கும் போதைப்பொருள் பயன்படுத்திய மாணவனை தாக்கிக்கொண்டிருக்கிறான். ஜோ தடுக்கிறார். அவனோ கத்தியைக்காட்டி மிரட்டுகிறான். ஜோ லாவகமாக சண்டையிட்டு அவனை மடக்கிப்பிடிக்க, மாணவனை ஜோ தாக்குவது போல ஒருவர் புகைப்படங்கள் எடுக்கிறார்.

காவலர்கள்அந்த மாணவனை இழுத்துச்செல்கிறார்கள்.

பள்ளிக்குள் இவன் எப்படி வந்தான்? என ஜோ விசாரிக்கிறார். யாரோ கதவைத்திறந்து உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். என காவலர்கள் சொல்ல, பள்ளிக்கதவுகளை எல்லாம் சங்கிலியால் பிணைத்து பூட்டுமாறு காவலர்களை பணிக்கிறார்.



Crazy Joe - மாணவனைத்தாக்கிய பள்ளி முதல்வர் என்ற தலைப்புடன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது. பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோவை அழைத்து விசாரிக்கிறார். ஜோ நடந்தவற்றை சொல்லுகிறார்.

பள்ளியில் கதவுகளை சங்கிலியால் பூட்டியிருக்கிறார்கள் என்ற செய்திபற்றி விசாரிக்க தீயணைப்பு அதிகாரி வருகிறார். அவரின் கேள்விகளுக்கு வழக்கமான துடுக்குடன் ஜோ பதிலளிக்க அவர் கோபம் கொள்கிறார். பள்ளியை பூட்டுவது தீயணைப்பு விதிகளுக்கு முரணானது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் கைது செய்வேன் என்று அந்த அதிகாரி கோபத்துடன் சொல்லிச்செல்கிறார்.

பள்ளிப்பாடல் பாடத்தெரியாமல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை கழிவறையில் பார்க்கிறார் ஜோ. பள்ளிப்பாடல் தெரியுமா?

அவர்கள் பாடுகிறார்கள்.

வழக்கமான ராகத்தில் இல்லாமல் தற்கால நடையுடன் பாடலை  வித்தியாசமாக மாணவர்கள் பாடுகிறார்கள். ஜோ ஆச்சரியப்படுகிறார்.

யார் இப்படி சொல்லித்தந்தது?

இசை அறையின் துணை ஆசிரியை.

மாணவர்களை அழைத்துக்கொண்டு இசை அறைக்கு விரைகிறார்.

துணை ஆசிரியையிடம்,

இவர்களுக்கு பள்ளிப்பாடலை வேறு ராகத்தில் கற்பித்தீர்களா?

ஆம். பழைய ராகம் நன்றாக இல்லை.எனவேதான்... என்று அவர் தயக்கத்துடன் கூற,

இவர்களுக்கு கற்றுத்தந்த பாடலை பள்ளியில் பயிலும் அனைவருக்கும் கற்றுத்தாருங்கள்! என்கிறார் ஜோ.


மகிழ்ச்சியுடன் முதல்வர் அறைக்குச்செல்கிறார். அங்கே அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. நடந்து முடிந்த இடைத்தேர்வில் மாணவர்கள் 38% தேர்ச்சியே அடைந்திருந்தனர்.

ஆசிரியர் கூட்டம். நன்கு வேலை பார்ப்பவர்கள், சரியாக வேலையில் கவனம் இல்லாதவர்களை தனியே பிரித்து நிற்கவைக்கிறார்.

இன்னும் மூன்று மாதங்களே இறுதித்தேர்வுக்கு உள்ளன.

நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள்?

உங்களில் எத்தனைபேர் உண்மையான சிரத்தையுடன் பாடத்திட்டம் தயார் செய்கிறீர்கள்?

பின்தங்கிய மாணவர்களுக்காக பள்ளி முடிந்தபின் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கின்கின்றீர்களா?

தேர்ச்சி பெறாமல் இருப்பது மாணவர்களின் குற்றமல்ல. ஆசிரியரின் குற்றம்.

 புதிய வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு பிற மாணவர்களைக்கொண்டே கற்பிக்க முயலுங்கள். விடுமுறை நாட்களில் வாசிப்பு பயிற்சி கொடுங்கள்.

நாங்கள் தயார்.மாணவர்கள் வரவேண்டுமே?

மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோரிடம் பேசுங்கள். அவர்களுக்கு வாசிக்க தெரியாவிட்டால் அவர்களையும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வரச்சொல்லுங்கள்.

ஜோவின் பேச்சால் ஆசிரியர்கள் புத்துணர்வு பெறுகின்றனர்.

பாடங்கள், விளையாட்டு முறைகளில் கற்பிக்கப்படுகின்றன.


மேயர் அலுவலகம். திருமதி. பானெட், பள்ளியிலிருந்து ஜோ நீக்கிய மாணவனின் தாய், தீயணைப்பு அதிகாரியுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜோவை பள்ளியிலிருந்து நீக்கினால் தேர்தலில் மேயரின் வெற்றிக்காக உழைப்பேன், என்னுடன் நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்கிறார் பானெட்.

தீயணைப்பு அதிகாரியும் பள்ளியை வேலை நேரத்தில் பூட்டி வைப்பது தவறு. ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அது உங்கள் வெற்றியை பாதிக்கும் என்கிறார்.

தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் அதன்பின் ஜோவின் குற்றத்தை நிரூபித்து கைது செய்யலாம் என மேயர்  திட்டமிடுகிறார்.
 இது ஜோவிற்கு தெரிய வருகிறது.

ஆசிரியர்கள் கூட்டத்தில் விவாதித்து, தீயணைப்பு அதிகாரி வரும்போது ரகசிய எண் 1௦ என்று வாக்கி டாக்கியில் சொல்வேன், சங்கிலிகளை நீக்கிவிடுங்கள். என்கிறார் ஜோ.

தீயணைப்பு அதிகாரி வரும் செய்தி கேட்டு அவசரத்தில் - கோட் 1௦- கதவுகளை பிணைத்திருக்கும் சங்கிலிகளை உடனே நீக்குங்கள் என்று அனைவருக்கும் செய்தி சொல்கிறார் ஜோ.

அதிகாரியும் திருமதி பானெட்டும் பத்திரிக்கையாளர்களுடன் பள்ளியின் உள்ளே வருகிறார்கள். ஜோவை கைது செய்வதாக தீயணைப்பு அதிகாரி சொல்கிறார்.

என்ன சாட்சி? என்று ஜோ கேட்கிறார்.

கையிலிருக்கும் ஒலிப்பதிவுக்கருவியிலிருந்து ஜோ பேசிய வார்த்தைகள் கேட்கின்றன. ஜோ அமைதியாக, பள்ளியை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர்களிடம் சொல்லியபடியே செல்கிறார்.

மேயர் அலுவகத்தில் ஜோ அடைக்கப்படுகிறார்.


திருமதி.பானெட் முயற்சியால் பள்ளி நிர்வாகக்குழு கூடுகிறது. கடுமையான குற்றச்சாட்டுகளை ஜோ மீது சுமத்தி அவரை நீக்கவேண்டும் என்று வாதிடுகிறார் பானெட்.

பெற்றோர்கள் பலவாறு விவாதிக்கிறார்கள். அப்போது வெளியே பெரும் சத்தம் கேட்கிறது.

மேயர் அலுவகத்தின் வெளியே, மாணவர்கள் அனைவரும் திரண்டு ஜோவை விடுதலை செய்யுமாறு குரல் எழுப்புகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் கலவரமாக ஆகிவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.எனவே மாணவர்களை அமைதியாக கலைந்து போகச்சொல்லுங்கள் என்று மேயர் ஜோவிடம் கேட்கிறார். ஜோவும் சம்மதிக்கிறார்.

திருமதி. பானெட், மாணவரிடையே பேசுகிறார். மாணவர்கள் அவரைக்கேலி செய்கிறார்கள்.

ஜோ, மாணவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்கிறார்.

மாணவர்கள், உங்களை விடுதலைசெய்தால் மட்டுமே செல்வோம் என்கிறார்கள்.

ஜோ அவர்களை அமைதிப்படுத்த வேண்டி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பள்ளியில் துணை முதல்வர் ஒரு கடிதம் கொண்டுவருகிறார். பள்ளித்தேர்வு முடிவுகள் அடங்கிய கடிதம் அது.

ஜோ அடஹி வாங்கி வாசித்துப்பார்த்து, பள்ளி கண்காணிப்பாளரை அழைத்து, அனைவருக்கும் கேட்கும்படி,

நடந்து முடிந்த இறுதித்தேர்வில் ஈஸ்ட்சைடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துவிட்டனர்.

மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரமிட திருமதி. பானட்டை ஒதுங்கச்சொல்லி  மேயர் பெருமிதத்துடன் கையசைக்கிறார்.

ஜோ தனது மாணவர்களுடன் செல்கிறார்.


ஜோ கிளார்க் என்ற ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து 1989 இல் எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.


ஜோ கிளார்க்காக நடித்துள்ளவர் புகழ்பெற்ற நடிகர் மார்கன் பிரீமேன். சுறுசுறுப்பு,வேகம், தலைமையாசிரியரின் கண்டிப்பு, கருணை என மார்கனின் நடிப்பை படம் முழுதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.


மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற படங்கள், மேலை நாடுகளில் எவ்வாறு ஆசிரியர்கள் சமாளிக்கிறார்கள் என்பதை  அறிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.


கல்வி முறைகள் மாறிவரும் சூழலில் ஆசிரியரின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் விவாதித்து புதிய முறைகளை பின்பற்றினால் வருங்கால தலைமுறை வளம் பெரும்.

குறிப்பாக அரசுப்பள்ளிகள் அழிவை நோக்கித்தள்ளப்படும் சூழலில் ஒரு தலைமையாசிரியர் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை Lean on me  திரைப்படம் மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.









No comments:

Post a Comment